
ஈப்போவில் தவறான இடத் தகவலால்தான் ஆம்புலன்ஸ் தாமதமானது; விபத்தில் 3 வயது சிறுமி பலி
ஈப்போ, பிப்ரவரி 16 –
ஈப்போ ஜெலாப்பாங் பகுதியில் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ஏற்பட்ட சாலை விபத்தின்போது ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட தவறான இடத் தகவலே காரணம் என பேராக் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜாலான் ஈப்போ–லுமுட் சாலையில் போலீஸ் ரோந்து வாகனமும் (MPV) பெரோடுவா கெலிசா காரும் மோதியதில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றவுடன் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அழைப்பாளர் முதலில் புஞ்சாக் ஜெலாப்பாங் குடியிருப்பு பகுதியை இடமாக தெரிவித்ததால், அங்கு சென்ற ஆம்புலன்ஸ் விபத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இடம் மீண்டும் உறுதி செய்யப்பட்டபோது, உண்மையான விபத்து இடம் ஜெலாப்பாங் நோக்கிச் செல்லும் ஈப்போ–லுமுட் நெடுஞ்சாலை என தெரியவந்தது.
ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை சென்றடைந்தபோது 33 வயது பெண் கடுமையாக காயமடைந்திருந்த நிலையில், 3 வயது சிறுமி மயக்க நிலையில் இருந்திருக்கின்றார். சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அச்சிறுமி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளாள்.
ஜெலாப்பாங்கிலிருந்து லுமுட் நோக்கிச் சென்ற கெலிசா கார் திடீரென எதிர் பாதையில் நுழைந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மோதலில் போலீஸ் வாகன ஓட்டுநரின் இரு கால்களும் காயமடைந்ததைத் தொடர்ந்து அவருடன் இருந்த அதிகாரிக்கு தோள் முறிவு மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து அவசர சேவை தகவல் வழங்கும் முறையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.



