
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி -22-மரணமடைந்த குவாந்தான் ஆயுதப்படை பயிற்சி வீரர் கே. இந்திரனுக்கு, பஹாங் சுல்தானின் இளையப் புதல்வர் Tengku Panglima Perang Tengku Ahmad Ismail Mu’adzam Shah நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பினாங்கு, ஜோர்ஜ்டவுன், தாமான் ஸ்ரீ நிபோங்கில் உள்ள வீட்டுக்கு சனிக்கிழமை மதியம் வந்த அவரை, இந்திரனின் குடும்பத்தார், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் Sim Tze Tzin, மலேசிய ஆயுதப் படையின் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட இளவரசர், அவர்களுக்கு ஆறுதலையும் கூறினார்.
22 வயது இந்திரன், குவாந்தான் ஆயுதப் படைத் தளத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில், பிப்ரவரி 18-ஆம் தேதி திடீரென சுயநினைவின்றி கிடந்தார்.
உடனடியாக தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காது மறுநாள் மரணமடைந்தார்.
இளம் பயிற்சி வீரரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலர் விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வேளையில், இந்திரனின் மரணத்தில் சித்ரவதையோ அல்லது பகடிவதையோ நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லை என, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் கூறியுள்ளார்.
சவப்பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
எனவே இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், விசாரணைக்கு வழிவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேவைப்பட்டால், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படலாம் என்றும் காலிட் கூறினார்.
முன்னதாக, மகனின் மரணம் குறித்து யூகங்களை எழுப்புவதை பொது மக்கள் நிறுத்த வேண்டும் என இந்திரனின் தாயார் உஷா கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
அத்தகைய யூகங்கள் ஆயுதப் படையின் நற்பெயரைப் பாதிக்கும் என்றார் அவர்.
இந்திரனின் நல்லுடல் முன்னதாக இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.



