
தெஹ்ரான், ஏப்ரல்-4-மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர் விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
F-15E வகையைச் சேர்ந்த அவ்விமானம் ஈரான் வான்வெளியில் விழுந்ததாகவும், அதிலிருந்த இரு விமானிகளில் ஒருவரை அமெரிக்கப் படைகள் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஈரானிய தொலைக்காட்சி நிறுவனமொன்று, காணாமல் போன விமானியை உயிருடன் பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதையடுத்து, விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகிலுள்ள மக்கள் செல்லத் தொடங்கியுள்ளதாகவும், ஈரான் மற்றும் அமெரிக்க அணிகள் இரண்டும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் மண்ணில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, வெளிப்படையாக தகவல் வெளியாகியுள்ளது இதுவே முதன் முறையாகும்.



