
தங்காக், ஏப் 8- மூவாருக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 64 வயது மாது ஒருவர் நேற்று புக்கிட் கம்பீரில் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
இதனால், அந்த பேருந்து பயணம் சிறிது நேரம் தடைபட்டது. காலை மணி 10.45 க்கு அந்தப் பெண்மணி தனது இருக்கையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பேருந்து ஓட்டுநரிடமிருந்து போலீஸ் துறைக்கு தகவல் கிடைத்ததாகக் தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent ரோஸ்லான் முகமட் தலிப் ( Roslan Mohd Talib ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புக்கிட் கம்பீர் சுகாதார மையத்திலிருந்து ஒரு மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அந்தப் பெண்மணி இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் உடல் தங்காக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவர் இருதய நோயால் மரணம் அடைந்தது தெரியவந்தது.



