
புத்ராஜெயா, ஏப்ரல்-12-கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லின் கீழ் இயங்கும் சுமார் பத்தாயிரம் வியாபாரிகளுக்கு அதிரடிச் சலுகையை அறிவித்துள்ளார் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ.
அதாவது, உணவங்காடி நிலையங்கள், சந்தைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட DBKL வளாகங்களில் உள்ள வியாபாரிகளுக்கு, 50 விழுக்காடு வாடகை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ள இந்த அதிரடி வாடகை குறைப்புச் சலுகை, அடுத்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீடிக்கும்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, வியாபாரிகளின் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹானா இயோ சொன்னார்.
DBKL போன்று, லாபுவான் கூட்டரசு பிரதேசக் கழகமும் இச்சலுகையை வழங்கும்.
எனினும், இதைப் பின்பற்றுவதற்கான மிகச் சிறந்த வழிவகைகளைப் புத்ராஜெயா கழகம் இன்னமும் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார்.
இவ்வறிவிப்பு கோலாலம்பூர் வட்டார சிறு வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



