
கோலாலம்பூர், ஏப்ரல்-22-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தை 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகளாவியப் பொருளாதாரச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,பொருளாதார அமைச்சர் அக்மால் நாசீர் கூறினார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சுற்றுலாத் துறை மீண்டு வருவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார் அவர்.
“காலக்கெடு மாற்றப்பட்டாலும், வருகையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. 47 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 329 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டுவதையே அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது,” என அவர் சொன்னார்.
தற்போது தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமானது என அமைச்சர் வலியுறுத்தினார்.



