
பெய்ஜிங், ஏப்ரல்-23-சீனாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு இருந்த ஒருவர் வீட்டை காலி செய்த பிறகு, அதன் உரிமையாளரான மாது உள்ளே சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வீடு முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்ததோடு, சுமார் ஒரு டன் அதாவது 1,000 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அந்த பாட்டில்கள் அனைத்திலும் சிறுநீர் நிரப்பப்பட்டிருந்ததால், அவருக்கு ‘தலை சுற்றியது’.
தவிர, வீட்டுக்குள்ளேயே சிகரெட் பிடித்து பிடித்து, சுவரெல்லாம் மஞ்சள் கறையாகி போயிருந்தது.
இந்நிலையில் வீடு முழுவதும் வீசிய தாங்க முடியாத துர்நாற்றத்தால், உரிமையாளர் சிறப்பு துப்புரவுப் பணியாளர்களை அழைத்தார்.
3 ஊழியர்கள் சேர்ந்து மணிக் கணக்கில் போராடி அந்த ஒரு டன் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே மாதக் கணக்கில் வாடகை பாக்கி வைத்திருந்த அந்த 40 வயது ஆடவரை, சீனப் புத்தாண்டுக்கு முன்பே வெளியேற்றுவதுதான் வீட்டு உரிமையாளரின் திட்டமாக இருந்தது.
ஆனால், தனித்து வாழும் தந்தை என்பதாலும், நோய்வாய்ப்பட்ட மகளை வைத்திருப்பதாலும் மனமிறங்கி ஏப்ரல் வரை அவரை அம்மாது விட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 8-ஆம் தேதி வீடு காலி செய்யப்பட்ட பிறகே விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வாடகைதாரரின் மனநிலை குறித்து இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



