
ஷா ஆலாம், ஏப்ரல்-23-ஷா ஆலாம் மாநகர மன்றத்திற்குச் சொந்தமான வாகனத்திலிருந்து சிகரெட் துண்டு ஒன்று வெளியே வீசப்பட்டதாகக் கூறப்படும் வைரல் வீடியோ தொடர்பாக, MBSA நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், MBSA சின்னம் பொறிக்கப்பட்ட வாகனத்தின் ஜன்னல் வழியாகச் சிகரெட் துண்டு வீசப்படுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மாநகர மன்ற ஊழியரே இவ்வாறு பொது இடத்தில் குப்பை வீசுவது முறையற்றது எனப் பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள MBSA, தங்கள் ஊழியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஊழியர் மற்றும் வாகனத்தை ஓட்டிச் சென்றவர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அது உறுதியளித்துள்ளது.
அரசு வாகனங்களை தனிப்பட்ட உபயோகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகளை அனைத்து ஊழியர்களும் பின்பற்றியாக வேண்டும்; மீறினால் நடவடிக்கை நிச்சயம் என அது எச்சரித்தது.



