
கோலாலாம்பூர், ஏப்ரல்-26-சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு 16 வயது வரம்பை நிர்ணயிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்குப் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இது குழந்தைகளை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக அவர்கள் வருணிக்கின்றனர்.
இந்த வயது வரம்பு என்பது டிஜிட்டல் அணுகுமுறையைத் தடுப்பதற்கான தடையல்ல, மாறாகக் குழந்தைகளை இணையத்தில் பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் செயல்படத் தயார்படுத்துவதற்கான ஒரு கல்வி முறையாகும் என, சிறுவர் நல ஆணையர் இணைப் பேராசிரியர் Dr Mohd AI Adib Samuri கூறினார்.
இதன் மூலம் இணையத் தாக்குதல் மற்றும் பாலியல் சீண்டல் போன்ற அபாயங்களைக் குறைக்க முடியும் என்றார் அவர்.
உளவியல் ரீதியாகப் பார்க்கும் போது, 16 வயதுடையவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் முதிர்ச்சியுடன் சிந்திக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது சமூக ஊடகங்களால் ஏற்படும் மன உளைச்சல், கவலை மற்றும் அடிமைத்தனத்தைக் குறைக்க உதவும்.
அதே வேளையில், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குப் பயனுள்ள தகவல்களைத் தேடுவதில் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மலேசிய இணையப் பயனீட்டாளர் சங்கமான MCCA-வின் தலைவர் Siraj Jalil, இந்த வயது வரம்பு கட்டுப்பாட்டுடன் தொடக்கக் கல்வி முதலே ‘டிஜிட்டல் அறிவுத்திறன்’ பயிற்சிகளையும் இணைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, போலிச் செய்திகளை அடையாளம் காணுதல், சாதனங்களின் பாதுகாப்பு மற்றும் AI தொழில்நுட்பத்தின் நன்மை – தீமைகள் குறித்த பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இது குறித்துப் பேசிய தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) தற்போது பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இப்புதிய விதிமுறை வரும் ஜூன் மாதம் முதல் அமுல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இணைய உலகம் அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாறும் என ஃபாஹ்மி நம்பிக்கைத் தெரிவித்தார்.



