பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்திற்கு 62 மணிநேர வேலை மட்டுமே; சுகாதார அமைச்சு விளக்கம்

புத்ராஜெயா, மே-10,
பயிற்சி மருத்துவர்களின் வேலை நேரம் வாரத்திற்கு அதிகபட்சம் 62 மணி நேரம் மட்டுமே என, சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
இப்புதிய நடைமுறையில் மருத்துவ சேவை, on-call பணிகள் மற்றும் பயிற்சி நேரங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக KKM கூறியது.
என்றாலும், நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ கண்காணிப்பு பாதிக்கப்படாது என அது உத்தரவாதம் அளித்துள்ளது.
மேலும், பயிற்சி மருத்துவர்களுக்கு ஆண்டு விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு மற்றும் அவசர விடுப்புகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆனால், மருத்துவமனைகளின் சேவை தேவைகளின் அடிப்படையில் விடுப்புகள் அனுமதிக்கப்படும்.
இளம் மருத்துவர்களின் வேலை அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்னைகள் குறித்து எழுந்த கவலைகளை தொடர்ந்து இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளம் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வேலைச் சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைவதாக அமைச்சு கூறிற்று.



