Latest

பல அரசியல் அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று விஜய் பதவியேற்பு

சென்னை, மே-10,

60 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பதவியேற்கிறார்.

பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 118 இடங்கள் கிடைத்ததால், நான்காவது முறையாக ​நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கியதையடுத்து, ஆட்சியமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு அதாவது மலேசிய நேரப்படி காலை நண்பகல் 12.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

விழாவில் பங்கேற்க முன்னாள் முதல் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், சூர்யா போன்ற திரையுலக உச்ச நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடுமெனத் தெரிகிறது.

நாளை திங்களன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள்; இந்நிலையில் மே 13-ஆம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் கால அவகாசம் வழங்கியுள்ளார்.

எனினும் இதுவரை 120 இடங்களைத் தாண்டி விட்டதால் சட்டமன்றத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடருவது உறுதி எனக் கூறப்படுகிறது.

இதனிடையே,
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆளுநர் மாளிகை முன் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்களின் ஆரவாரத்திற்கு இடையே, மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் விஜய்.

பனையூரில் உள்ள அவரின் இல்லத்தின் முன்பும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் TVK ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் ஆடிப்பாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல் தேர்தலிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் விஜயின் பதவியேற்பு விழாவை இந்தியாவே உற்றுநோக்கியுள்ளது.

“ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் இன்று முதல்வராகப் பதவியேற்பதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!