
ஜார்ஜ்டவுன், மே-11 – ஹந்தா வைரஸ் (hantavirus) பரவல் அச்சத்தைத் தொடர்ந்து, பினாங்கிற்கான அனைத்து கடல் மற்றும் வான் நுழைவுப் பகுதிகளிலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் (Daniel Gooi) தெரிவித்துள்ளார்.
சர்வதேச சொகுசுக் கப்பலான எம்.வி. ஹோன்டியஸில் (MV Hondius) ஹந்தா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட பயணிகளைக் கண்டறிய, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் inframerah அதாவது அகச்சிவப்பு கதிர் கேமராக்கள் மூலம் தொடர்ந்து சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை மலேசியாவில் ஹான்டா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு மற்றும் ஆய்வக பரிசோதனை திறன்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக டேனியல் கூய் கூறினார்.
மேலும், பினாங்கு துறைமுகங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கும் அனைத்து கப்பல்கள் மற்றும் பயணிகளும் கடுமையான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



