
கோலாலம்பூர், மே-9-தஞ்சோங் ரூ கடற்கரைக்கு அப்பால் எம்.வி. லக்கி கேமிலியா கப்பலில் நடந்த சண்டையின் போது, சக ஊழியரால் பணியாளர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதாக MMEA எனப்படும் சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரவு மணி 8.52 க்கு உதவி கோரி நடவடிக்கை மையத்திற்கு ஓர் அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து , சிலாங்கூர் கடற்கரையிலிருந்து சுமார் நான்கு கடல் மைல் தொலைவில் இருந்த அந்தக் கப்பலுக்கு பெங்கலாங் 41 என்ற ரோந்துப் படகு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் MMEA இயக்குநர் அப்துல் முஹைமின் சாலே (Abdul Muhaimin Salleh) கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 36 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 307 ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, அந்நபர் மீது விசாரணை நடத்தப்படும் என்று Abdul Muhaimin கூறியதாக பெர்னாமா இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
போர்ட் கிள்ளான் துறைமுகத்திற்கு அருகிலுள்ள Pulau Indah வில் அதிகாலை மணி 1.15 அளவில் மெரின் போலீஸ் படகு துறைக்கு ரோந்து கப்பல் கப்பல் வந்தடைந்த பிறகு, 47 வயதான பாதிக்கப்பட்ட நபர் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டதாக முஹைமின் கூறினார்.
அதே வேளையில் சந்தேக நபரும் மேல் நடவடிக்கைக்காக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.



