
லண்டன், மே 12 – கடந்த வாரம் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளதால், அவர் புதிய நெடிக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.
விரைவில் தலைமைத்துவத்திற்கான போட்டி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கட்சியின் நான்கு உதவியாளர்களும் ராஜினாமா செய்துள்ளதால், ஸ்டார்மர் மீதான நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
திங்களன்று லண்டனில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில், கட்சி உறுப்பினர்களும் வாக்காளர்களும் தொடர்ந்து தனக்கு ஆதரவளிக்குமாறும், குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் அதிகாரப் போராட்டத்தைத் தவிர்க்குமாறும் ஸ்டார்மர் வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்டார்மர் தனது ராஜினாமாவுக்கான காலக்கெடுவைப் பரிசீலிக்குமாறு மேலும் பல அமைச்சர்களுடன் இணைந்து பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்முட்டும் (Shabana Mahmood) கேட்டுக்கொண்டதாக தெ டைம்ஸ் தகவல் வெளியிட்டது.
2029-ல் நடைபெறவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை வழிநடத்த முடியும் என்பதில் தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று அவரது நான்கு முக்கிய உதவியாளர்களும் கூறினர்.
எனினும் காலியாக உள்ள இடங்களை நிரப்ப புதிய நியமனங்களை ஸ்டார்மர் உடனடியாக அறிவித்தார்.



