
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விமான நிலைய இரயில் நிலையம் அருகே நேற்று மதியம் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
இரயில்வே கடவுப் பாதையில் சிகப்பு விளக்கு சமிக்ஞை விழுந்ததால், பொதுப் பேருந்து ஒன்று தண்டவாளத்தின் மீதே நிறுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தானியங்கி இரயில்வே வேலி தடுப்புகள் மூடப்பட முடியாமல் போனதாக அதிகாரிகள் கூறினர்.
அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த கனரக சரக்கு இரயில், பேருந்து நின்று கொண்டிருப்பதை பார்த்து பிரேக் பிடித்தும், குறிப்பிட்ட தூரத்திற்குள் இரயிலை நிறுத்த முடியாமல் பேருந்தின் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பேருந்து நொறுங்கிய சில நிமிடங்களிலேயே தீப்பற்றி எரிந்தது.
தண்டவாளத்தை ஒட்டி நின்று கொண்டிருந்த சில கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் இரயில் இழுத்துச் சென்றது.
விபத்தில் உயிரிழந்த 8 பேரும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்து கடும் அதிர்ச்சித் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் (Anutin Charnvirakul), முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த இரயில்-பேருந்து மோதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



