
வாஷிங்டன், மே-19-மத்தியக் கிழக்கு நாடுகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஈரான் மீது செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், கட்டார் அமீர், சவூதி அரேபிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் உச்சத் தலைவர் ஆகியோர் தன்னிடம் இந்தத் தாக்குதலை இரண்டு மூன்று நாட்களுக்குத் தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் தற்போது தீவிரப் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், விரைவில் ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
என்றாலும், எத்தகைய ஒப்பந்தமாக இருந்தாலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்.
ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், எந்நேரமும் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தத் தயாராக இருக்குமாறு தற்காப்புத் துறைக்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.



