
கோலாலம்பூர், மே-20-கோலாலம்பூர், ஸ்தாப்பாக் அரசாங்க கிளினிக்கில் நோயாளி ஒருவருக்கு சீன மொழியிலான டெங்கி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்ட விவகாரம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், அரசு கிளினிக் ஒன்றில் ஏன் சீன மொழியில் அட்டை வழங்கப்பட்டுள்ளது என நோயாளியின் பாதுகாவலர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், டெங்கி காய்ச்சல் அறிகுறியுடன் வந்த ஒரு குழந்தைக்கு, தவறுதலாகவும் எதிர்பாராதவிதமாகவும் இந்த அட்டை மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது.
அரசாங்க கிளினிக்குகளில் சேவைகளுக்கு மலாய் மொழியே அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள சுகாதாரத் துறை, மக்கள் நடமாட்டம் மற்றும் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பை எளிதாக்குவதற்காக மட்டுமே பல்வேறு மொழிகளில் துணை அட்டைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடமையில் இருந்த மருத்துவ அதிகாரி, நோயாளியின் பாதுகாவலருக்கு மலாய் மொழியிலேயே தேவையான விளக்கங்களை வாய்மொழியாகக் கூறியதுடன், மருத்துவக் குறிப்புகளையும் மலாய் மொழியிலேயே எழுதியுள்ளார்.
என்றாலும், இந்தத் தவற்றிற்கு வருத்தம் தெரிவித்துள்ள அத்துறை, எதிர்காலத்தில் இத்தகைய அட்டைகள் கவனமாக விநியோகிக்கப்படுவதை உறுதிச் செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.



