
பெங்களூரு, மே-20-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில், சில நாட்களுக்கு முன்பு ‘கஞ்சன்’ யானையுடன் ஏற்பட்ட கொடூர சண்டையில் படுகாயமடைந்த ‘மார்த்தாண்டா’ என்ற வளர்ப்பு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
53 வயது மார்த்தாண்டா யானை, முகாமில் உள்ள காவேரி ஆற்றில் திடீரென ஆக்ரோஷமான ‘கஞ்சன்’ யானையால் கடுமையாகத் தாக்கப்பட்டது.
இந்த மோதலில் அதன் உடலில் ஆழமான தந்தக் காயங்களும், கடுமையான உட்புற இரத்தப்போக்கும் ஏற்பட்டன.
வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி அந்த யானை முகாமிலேயே உயிரிழந்தது.
முன்னதாக, அவ்விரு யானைகள் மோதிக்கொண்டதில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுப் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது காயமடைந்த ‘மார்த்தாண்டா’ யானையும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முகாமில் உள்ள யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



