
தைப்பிங், மே-20-பேராக், தைப்பிங்கில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கேபிள்களைத் திருடி, லாரியில் ஏற்றி கடத்த முயன்ற 5 பேர் கொண்ட உள்ளூர் திருட்டுக் கும்பலை போலீஸார் கையும் களவுமாக கைது ச்செய்துள்ளனர்.
இரகசியத் தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீஸார், சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த லாரி ஒன்றைச் சோதனையிட்டனர்.
அப்போது, போலீஸாரின் வருகையைக் கூட கவனிக்காமல், லாரியின் உள்ளே கேபிள்களை துண்டு துண்டாக வெட்டி, அதனை ஏற்றி வைப்பதில் தீவிரமாக இருந்த 5 சந்தேக நபர்களையும் போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இந்த அதிரடிச் சோதனையின் போது, திருடப்பட்ட பெருமளவிலான கேபிள்கள் மற்றும் அவற்றை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதிநவீன உபகரணங்கள், லாரி ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதுச் செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் என்றும், போதைப்பொருள் சோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கும்பல் நீண்ட நாட்களாக இப்பகுதியில் கேபிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 5 ஆடவர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



