
பெட்டாலிங் ஜெயா, மே 20 – கிளானா ஜெயா (Kelana Jaya) LRT சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய 26 ரயில்கள் 2031-க்குள் முழுமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என Rapid Rail அறிவித்துள்ளது.
Rapid Rail LRT தலைமை செயல்பாட்டு அதிகாரி நோர் அஸ்மி முகமட் யூசோப் (Nor Azmi Mohd Yusof) கூறுகையில், முதல் புதிய ரயில் 2029-ஆம் ஆண்டு வரவுள்ளதாகவும், பழைய ரயில்களை மாற்றும் பணிகள் 2030-இன் இறுதிக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
அதுவரை தற்போது பயன்படுத்தப்படும் பழைய ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்காக தொடர்ந்து பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
கடந்த May 12-ஆம் தேதி பேட்டரி கேபிள் உருகிய சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில்களும் விரிவாக சோதிக்கப்பட்டதாகவும், அதேபோன்ற வேறு பிரச்னைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிளானா ஜெயா (Kelana Jaya) LRT பாதையின் பயணிகள் பயன்பாடு ஏப்ரல் மாதத்தில் 109 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



