
காஜாங், மே-26-பிரபல வர்த்தகர் Albert Tei-க்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் புகார் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கியை, போலீஸ் நேரில் அழைத்து விசாரிக்கவுள்ளது.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Albert Tei, தனக்கு அநாமதேய நபர்களிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாக முன்னதாக போலீஸ் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த விவகாரம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்புகார் குறித்து விரிவான விசாரணையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, அச்சுறுத்தல் சம்பவத்தின் பின்னணி மற்றும் உண்மைத் தன்மையைக் கண்டறிய, அப்போது MACC தலைவராக இருந்த அசாம் பாக்கிக்கு நேரில் முன்னிலையாகுமாறு போலீஸ் அழைப்பு விடுத்துள்ளதாக குமார் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார் அவர்.



