
புத்ராஜெயா, மே-29 – RON95 பெட்ரோல் மானியத்தில் மாற்றம் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தின் இறுதி முடிவாகவே இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது மக்களின் அன்றாடப் பொருளாதாரத்தில் நேரடிப் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தற்போதைக்கு இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பிரதமரின் மூத்த பொருளாதார ஆலோசகர்
Nurhisham Hussein, அரசாங்கம் தற்போது மாற்று வழிகளில் செலவினங்களைக் குறைக்கக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
குறிப்பாக, தளவாடத் துறையின் (Logistics) கீழ் வழங்கப்படும் மானிய விலை டீசல் ஒதுக்கீட்டை முறைப்படுத்துவதே இப்போதைய முக்கிய நோக்கமாகும்.
எரிபொருள் கையிருப்பு குறித்துப் பேசிய அவர், பெட்ரோனாஸ் மற்றும் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களின் பங்களிப்பால், மலேசியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு வரும் ஜூலை மாதம் வரை தாராளமாகப் போதுமானதாக இருக்கும் என உறுதிப்படுத்தினார்.
அதோடு, நாட்டின் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை ஒரு சிறப்புக் குழு வாரந்தோறும் கண்காணித்து வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு தற்போதைக்குத் சீராக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



