
தாப்பா, ஜூன்-7-பேராக், தாப்பா, கூனோங் பத்து பூத்தேயில் மலையேற்றத்தின் போது காணாமல் போன 49 வயது Jaslinda Saludin, 15 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், Pos Musoh-வில் உள்ள ஓராங் அஸ்லி கிராமத்திற்கு அருகே நஸ்ரி பா எங் என்ற உள்ளூர்வாசியால் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
_”ஆற்றோரராக அவர் உடலளவில் மிகவும் பலவீனமடைந்து, அழுதுகொண்டே தள்ளாடி நடந்து வந்தார்”_ என நஸ்ரி உருக்கமாகக் கூறினார்.
காட்டில் வழிதெரியாமல் தவித்த Jaslinda, 2 வாரங்களாக பட்டினியாக இருந்துள்ளார்.
Periuk kera எனப்படும் தாவரத்தில் கருப்பு நிறத்தில் தேங்கியிருந்த நீரை மட்டுமே இவர் குடித்து பிழைத்திருக்கிறார்.
இந்நிலையில் உடனடியாக அவரை வீட்டுக்கு அழைத்து வந்து உணவும் நீரும் கொடுத்து, பின்னர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததாக நஸ்ரி சொன்னார்.
மீட்கப்பட்ட Jaslinda, கிராமத் தலைவர் இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த மே 24 முதல் காணாமல் போன இவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறை, போலீஸார் மற்றும் ஓராங் அஸ்லி மக்கள் எனப் பல தரப்பினர் நம்பிக்கைத் தளராமல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது மலேசியர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



