
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபாராஹிம் முதல் முறையாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தது மாணவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
2008ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி இப்பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ஒருவர் இங்கு வருகை புரிவது இதுவே முதல் முறையாகும்.
AIMST வேந்தரும் ம.இ.கா தேசியத் தலைவருமான தான் ஶ்ரீ விக்னேஸ்வரனின் தலைமத்துவத்தில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதி கட்டமைப்புகளும் கல்வி உபகரணங்களும் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை நேரடியாக காணும் வகையில் பிரதமரின் வருகை அமைந்திருந்தது.
ஏறக்குறைய 3000 பேர் பங்கேற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமரின் உரை அனைவரையும் உற்சாகமூட்டியதாக பல்கலைக்கழக நிர்வாகம் மன நிறைவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமதுரையின்போது வருடாந்திர மானியமாக MIEDக்கு 25 மில்லியன் ரிங்கிட் நிதியைத் தவிர வறுமைநிலை மாணவர்களுக்காக கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் மானியத்தையும் பிரதமர் அறிவித்திருந்தது மாணவர்களை மேலும் உற்சாகமூட்டியது.
அதே சமயத்தில், நாட்டின் உச்ச பதவியான பிரதமர் பதவியில் இருந்த போதும், மாணவர்களுடன் சாதாரணமாக அளவளாவிய அன்வாரின் பண்பைக் கண்டு மாணவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த வருகை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டையும் உறுதிப்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.



