
சிரம்பான், ஜூன்-10-நெகிரி செம்பிலானின் ‘புதிய சமஸ்தானாதிபதி’ என துங்கு நாட்சாருடின் துவாங்கு ஜாஃபார் (Tunku Nadzaruddin Tuanku Jaafar) பிரகடனப்படுத்தப்பட்டதை மாநில அரண்மனை முற்றாக நிராகரித்துள்ளது.
நெகிரி செம்பிலான் அரச முத்திரைக் காப்பாளர் டத்தோ அசிசி அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு சாசனம் மற்றும் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறாகச் செய்யப்பட்ட இந்த நியமனம் சட்டப்படி செல்லாது என அறிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டவிரோத பிரகடனத்தை ஏற்க முயன்றதன் மூலம், துங்கு நாட்சாருடின் தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ‘துங்கு பங்லீமா பெசார்’ என்ற பாரம்பரியப் பட்டத்தை இயல்பாகவே இழந்துள்ளார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
மலாக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் Undang எனப்படும் பாரம்பரிய தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த நியமன விழா, உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை மீறி அவசர அவசரமாகச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நடப்பு சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரே நெகிரி செம்பிலானின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியாளர் என்றும், சட்டப்பூர்வ செயல்முறைகளை மீறும் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் நிலைத்தன்மையைக் குலைக்கும் என்றும் எச்சரித்தார்.



