
சென்னை, ஜூன்-10-இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்.
நீண்ட காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சென்னை, நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் 84 வயதில் அவரின் உயிர் பிரிந்தது.
மகனும் நடிகருமான மனோஜின் திடீர் மரணத்திற்குப் பிறகு முற்றிலும் முடங்கிபோயிருந்த பாரதிராஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அண்மையில் தான் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவரின் மரணம் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1977-ஆம் ஆண்டு கமலஹாசன்- ரஜினிகாந்த் – ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா.
அப்படத்தின் மாபெரும் வெற்றி, தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் அவரைப் பிரபலமாக்கியது.
கிழக்கே போகும், ரயில், சிகப்பு ரோஜாக்கள், மண்வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமை, கருத்தம்மா, பசும்பொன் உள்ளிட்டவை இவருக்குப் பெரும் புகழ் சேர்த்த படங்களாகும்.
பத்ம ஸ்ரீ விருது, 6 தேசிய விருதுகள் தமிழக அரசின் உயரிய கலைமாமணி விருதுகளை வென்றுள்ள பாரதிராஜா, கடைசியாக 2020-ல் மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கியிருந்தார்.
நடிகராக, கடந்தாண்டு வெளியான துடரும் எனும் மலையாளப் படம் இவரின் கடைசிப் படமாகும்.
மிகப் பெரிய ஆளுமையை இழந்து தமிழ் திரையுலகம் தவிப்பதாக, அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.



