Latestமலேசியா

பாசீர் கூடாங் ஆரஞ்சு நிறப் புகை விவகாரம்: சுற்றுச்சூழல் இலாகா தீவிர விசாரணை

பாசீர் கூடாங், ஜூன்-12-ஜோகூர், பாசீர் கூடாங் தொழிற்பேட்டை வளாகத்தில் நேற்று காலை ஆரஞ்சு நிறப் புகை வெளியேறிய சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் இலாகாவான JAS தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களைத் தொடர்ந்து, Jalan Keluli பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், அங்கு புகை வெளியேறுவது நின்றிருந்தாலும், அப்பகுதியில் இன்னும் கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர்.

இந்தச் சம்பவம் 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தை மீறியுள்ளதா என்பதைக் கண்டறிய, தீயணைப்புத் துறை மற்றும் பாசீர் கூடாங் மாநகர மன்றத்துடன் இணைந்து JAS விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள Taman Pasir Putih மற்றும் Pasir Gudang 3 இடைநிலைப் பள்ளிகளில் காற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டது.

என்றாலும், தற்போது இரு பள்ளிகளிலும் காற்றின் தரம் இயல்பான அளவிலேயே இருப்பதாகவும், அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் பாசீர் கூடாங்கில் பல தொழிற்சாலை மாசு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, 2019-ஆம் ஆண்டில் Sungai Kim Kim ஆற்றில் இரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!