
தானா மேரா, ஜூன்-14 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் மற்றொரு திருப்பமாக, டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின், மீண்டும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஸ் கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டுள்ளார்.
கூட்டணியின் ஒருமனதான முடிவின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹம்சாவின் பரந்த நாடாளுமன்ற அனுபவமும், அவரது நிர்வாகத் திறனும் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் யுக்திகளை வலுவாக வழிநடத்த மிக அவசியமானவை என்று அப்துல் ஹாடி குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் பெரிக்காத்தான் தலைவராகத் தொடருவார் என ஹாடி அறிவித்தார்.
இவ்வேளையில், ஹம்சா தனது புதிய கட்சியான Parti Wawasan Negara என்ற கட்சியை கிளந்தான் தானா மேராவில் நடைபெற்ற ‘Reset’ மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
ஹாடி அவாங்காலேயே இப்புதிய கட்சிக்குப் பெயர் சூட்டப்பட்டது என்றும், அடுத்த வாரம் இக்கட்சியின் முதல் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் ஹம்சா அறிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினுடனான தலைமைத்துவப் போட்டிக்கு மத்தியில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஹம்சா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்புதிய வாவாசான் கட்சி பாஸ், கெராக்கான் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து, பெரிகாத்தான் நேஷனல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கத்துவம் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்மையில் பெர்சாத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் நிறுத்திய நிலையில், ஹம்சாவையும் அவரது புதியக் கட்சியும் பெரிக்காத்தானுக்குள் நுழைவதானது, பெர்சாத்துவை மேலும் தனிமைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



