
தும்பாட், ஜூன்-19-கிளந்தான், தும்பாட்டில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுமி ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் தடியால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை 7 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை தேடி அலைந்துள்ளார்.
இந்நிலையில், காலை 11 மணியளவில் Kampung Mesira கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்கால் அருகேயுள்ள புதர் பகுதியில் சிறுமி பாதி மயக்க நிலையில் காயங்களுடன் கிடப்பதை பொது மக்கள் கண்டறிந்து தந்தைக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
முகம், தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயமடைந்த அச்சிறுமி, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் அச்சிறுமியை கற்பழித்து விட்டு, அவரின் கைப்பேசியையும் சந்தேக நபர் அபகரித்து கொண்டு ஓடியுள்ளான்.
அவனைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ள போலீஸார், சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.



