
கோலாலம்பூர், ஜூன்-19-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை முன்னிட்டு, நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சட்டவிரோத விளையாட்டுப் பந்தயம் மற்றும் இணைய சூதாட்ட வேட்டையில் 58 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யுடன் இணைந்து Ops Soga XI எனும் கூட்டு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 52 சோதனைகளில் 54 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கைதாகினர்.
இச்சோதனையின் போது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில், சுமார் 489,000 ரிங்கிட் மதிப்பிலான சூதாட்ட பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், சட்டவிரோத சூதாட்டத்தை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்பட்ட இணையத் தளங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் உட்பட 42 தளங்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
MCMC உதவியுடன் இவை உடனடியாக முடக்கப்படும் என குமார் சொன்னார்.
கைதுச் செய்யப்பட்டவர்கள் அனைவரும் 1953-ஆம் ஆண்டு சூதாட்டச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



