Latestமலேசியா

பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி பலி; சிரம்பானில் அதிர்ச்சி

சிரம்பான், ஜூன்-20 – நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள ​பள்ளி கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்ததில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று ​காலை 10.48 மணியளவில், அம்மாணவி பள்ளி வளாகத்தில் மயக்க நிலையில் கிடந்தது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் கூறியது.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர், அந்த மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

​இப்போதைக்கு இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் உடல் சவப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்ட போலீஸார், விசாரணைக்கு உதவக்கூடிய சில நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

​இதனிடையே, இந்த மரணம் குறித்து வெளியான முதற்கட்டத் தகவல்களின்படி, அம்மாணவி பள்ளியில் எந்தவொரு பகடிவதைக்கும் ஆளாகவில்லை என, கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ Dr Azam Ahmad தெரிவித்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று பள்ளியின் ‘மதிப்பெண் அட்டை வழங்கும் தினத்திற்காக’ வந்திருந்த அந்த மாணவி, கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்பதற்கு முன்பு வரை எந்தவொரு அசாதாரணமான நடத்தையையும் வெளிப்படுத்தவில்லை.

உடல் ஆரோக்கியப் பிரச்னையும் எதுவும் இல்லை என மாணவியின் பெற்றோர் உறுதிப்படுத்தியதாக Azam சொன்னார்.

​மறைந்த மாணவியின் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை இணையத்தில் பகிர்வதைத் தவிர்க்குமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!