Latestமலேசியா

மலேசிய கட்டடக் கலைஞர் சங்கத்தின் உயரிய தலைவர் விருதைப் பெற்றார் ஙா கோர் மிங்; CCC சட்டக் கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன்-21-அரசாங்கத்திற்கும் கட்டடக் கலைத் துறைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி, நாட்டின் கட்டமைக்கப்பட்ட சூழலை மேம்படுத்தியதற்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை (KPKT) அமைச்சர் ஙா கோர் மிங்கிற்குப் புகழ்பெற்ற ‘PAM தலைவர் விருது’ (PAM President’s Award) வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

​மலேசிய கட்டடக் கலைஞர் சங்கத்தின் (PAM) 102 ஆண்டுகால வரலாற்றில் இந்த உயரிய விருதைப் பெறும் ஐந்தாவது நபர் ஙா கோர் மிங் ஆவார்.

இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் மட்டுமே இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

​மலேசிய கட்டடக் கலைஞர் சங்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் இவ்விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த KPKT அதிகாரிகளின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், கட்டடக் கலைத்துறையின் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவாக, கோலாலம்பூர் கட்டிடக்கலை விழாவுக்கு (KLAF 2026) 30,000 ரிங்கிட் நிதியுதவியையும் அவர் அறிவித்தார்.

​இவ்விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பாக, ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான இறுதிச் சான்றிதழான ‘CCC’ நடைமுறையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அவ்வகையில் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும், தேவையற்ற அதிகாரத்துவ தாமதங்களைக் குறைக்கவும், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும் புதிய சிறப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

​அதோடு, சான்றளிக்கப்பட்ட கட்டடக் கலைஞர்கள் நேரடியாக ‘வளர்ச்சி உத்தரவு’ (Development Order) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் அமைச்சு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஙா கோர் மிங் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!