
சென்னை, ஜூன் 24 – உணவகங்களை மதிப்பாய்வு அதாவது ‘Food Review’ செய்யும் ‘யூடியூபர்கள்’ மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உரிமம் பெற்ற உணவகங்களில் மட்டுமே உணவை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதிப்பாய்வு செய்வதற்கு முன் அந்த உணவகத்திற்கு செல்லுபடியாகும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உணவக ஊழியர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா, உணவுகள் சுத்தமாக தயாரிக்கப்படுகிறதா, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களின் வெளிப்புற மற்றும் உள்புற தோற்றத்தை மட்டும் காட்சிப்படுத்தி விளம்பரப்படுத்தாமல், உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மதிப்பாய்வாளர்கள் தகவல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சரியான மற்றும் நம்பகமான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.



