Latestமலேசியா

ஜோகூர் தேர்தல்: PN போட்டியிடாத 23 தொகுதிகளில் BN-ஐ ஆதரிக்க பாஸ் உத்தரவு

ஜோகூர் பாரு, ஜூன்-28-ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி போட்டியிடாத சட்டமன்றத் தொகுதிகளில், பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பாஸ் கட்சித் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலாய்-முஸ்லீம் வாக்குகள் சிதறிப்போவதைத் தடுப்பதற்கும், பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் வெற்றியை முறியடிப்பதற்கும் இந்த வியூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தம் உள்ள 56 இடங்களில் 33 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

அவற்றில் ஆக அதிகமாக பெர்சாத்து 16 தொகுதிகளிலும், பாஸ் 11 தொகுதிகளிலும், MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி 5 இடங்களிலும் PERJUANG கட்சி ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.

தேசிய முன்னணியும், பக்காத்தானும் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், பெரிக்காத்தான் வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

ஒருவேளை பாரிசானுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் மறைமுக ஒத்துழைப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாஸ் கட்சியின் இந்த அறிவிப்பு தேர்தல் களத்தில் ஒரு புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ உத்தரவு, BN கூட்டணி போட்டியிடாத எஞ்சிய 23 தொகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்திய துவான் இப்ராஹிம், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் எதிர்கால நலனைக் கருதி ஆதரவாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!