
கோப்பெங், ஜூன்-30-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (JBPM), கோப்பெங் தீயணைப்பு நிலையத்துடன் இணைந்து நடத்தும் “கோபெங் சமூகத் தீயணைப்புப் பாதுகாப்புத் திருவிழா 2026” (Gopeng Community Fire Safety Festival 2026) வரும் ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமையன்று கோப்[பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இத்திருவிழாவில் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பல்லினப் பொது மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வை தேஜா சட்டமன்ற உறுப்பினரும், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான Sandrea Ng Shy Ching அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார்.
“தீ பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இத்திருவிழா, பொது மக்களிடையே தீ தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீயணைப்புத் துறைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலவசமாக நடத்தப்படும் இத்திருவிழாவில், 43 அங்குல LED தொலைக்காட்சி முதன்மைப் பரிசாகக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்கல், தீயணைப்புத் துறையினரின் நேரடி அதிரடிச் செயல்முறை விளக்கங்கள் என குடும்பத்தினர் அனைவரும் இரசிக்கும் வண்ணம் பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



