Latestமலேசியா

15 ஆண்டுக்கால நட்பு; திருமணத்தில் RM150 மொய் கொடுத்த தோழியை அவமானப்படுத்திய மணமக்கள்: வலுக்கும் கண்டனம்

கோலாலாம்பூர், ஜூன்-30-திருமணத்திற்கு வருகை தந்து 150 வெள்ளி மட்டுமே மொய்ப்பணம் அல்லது ‘அங்பாவ்’ வழங்கிய விருந்தினர் ஒருவரை இணையத்தில் பகிரங்கமாக அவமானப்படுத்திய மணமக்களின் செயல் மலேசியர்களிடையே பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் யாரோ எவரோ அல்ல; மாறாக அவரும் அந்த மணமகளும் படிவம் 1 முதல் ஒன்றாகப் படித்து, கடந்த 15 ஆண்டுகளாக வாழ்வில் அனைத்து இன்ப துன்பங்களையும் ஒன்றாகக் கடந்து வந்த மிக நெருங்கிய தோழர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தோழியால் அவமானப்படுத்தப்பட்ட அப்பெண், தமக்கு நேர்ந்த பண நெருக்கடிகள் மற்றும் அந்த திருமணத்திற்காகத் தாம் செய்த கூடுதல் செலவுகள் குறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த திருமண விழாவில் ஒவ்வொரு மேஜைக்கும் 3,000 வெள்ளி செலவிடப்பட்டதாகவும், நுழைவாயிலில் சிறப்பு இசைக்குழு (Live Band) ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் மணமகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட தோழியோ தமக்குக் குறைந்த அளவே சம்பளம் கிடைப்பதாகவும்; கார் தவணை, வீட்டு வாடகை மற்றும் தாயாருக்கான செலவு போகத் தமிடம் மிகக் குறைந்த சேமிப்பே எஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியிருந்தும், 15 ஆண்டுக்கால நட்புக்காக புதிய ஆடை, அலங்காரம் மற்றும் e-hailing போக்குவரத்து எனத் தமது சொந்தப் பணத்திலிருந்து 200 வெள்ளியைச் செலவு செய்து அவர் திருமணத்திற்கு வந்துள்ளார்.

தற்கால ‘சந்தை நிலவரப்படி’ அங்பாவ் தொகை 250 அல்லது 300 வெள்ளியாக இருந்தாலும், தங்களின் நீண்ட கால நட்பு வெறும் பணத்தை வைத்து மதிப்பிடப்படக் கூடாது என்ற நம்பிக்கையிலேயே 150 வெள்ளி கொடுத்ததாக அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மணமகளின் இச்செயல் பொது மக்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

தற்காலத்தில் திருமணங்கள் என்பது இறை ஆசியுடன் தம்பதியரை வாழ்த்தும் நிகழ்வாக இல்லாமல், ஆடம்பரச் செலவுகளை ஈடுகட்டும் ஒரு வியாபாரமாக மாற்றப்பட்டு வருவதாகப் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விருந்தினர்கள் தங்களின் வசதிக்கும் தகுதிக்கும் ஏற்பவே மொய்ப்பணம் வழங்க வேண்டுமே தவிர, ஹோட்டல் சாப்பாட்டு விலைக்கு ஏற்ப அங்பாவ் வழங்கக் கட்டாயப்படுத்தக் கூடாது என வலைத்தளவாசிகள் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!