Latestமலேசியா

முன்னோடி தேசியக் கலைஞர் பி.ரம்லியை நினைவு கூரும் வாரம்; தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு தொடக்கி வைக்கப்பட்டது

மலேசியாவின் தேசிய ஆவணக் காப்பகம் வாயிலாக, ‘என் வாழ்நாள் முழுவதும்’ (Sepangjang Riwayatku) என்ற கருப்பொருளில் 2026 பி.ரம்லி நினைவு வார விழாவை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு தொடக்கி வைத்துள்ளது.

நாட்டின் உன்னதக் கலைஞர் டான் ஶ்ரீ பி.ரம்லியை நினைவுகூர்வதோடு அவர் பிறந்த இடத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவ்விழாவை பினாங்கு மாநில ஆளுநர் Tun Dato’ Seri Utama Haji Ramli Ngah Talib அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நாட்டின் திரைப்பட மற்றும் இசை அடையாளத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அந்தப் புகழ்பெற்ற கலைஞரின் அளப்பரிய பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவருக்குத் தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இவ்விழா அமைந்துள்ளது.

அந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang, நாட்டின் கலைப் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் அரசாங்கம் மிகுந்த கடப்பாடு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதே சமயம் இத்தகைய விழாக்கள் வரலாற்றை மதிப்பதையும் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கின்றன.

டான் ஸ்ரீ பி. ரம்லி வாழ்நாள் முழுவதும் உள்ளூர் கலைத்துறையை வரையறுத்தது மட்டுமல்லாமல், மக்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் புதுமையான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

நாட்டின் கலைத்துறையில் அவரது பங்களிப்பு அளப்பரியது. எனவே, டான் ஸ்ரீ பி. ரம்லியின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்த,தேசிய ஆவணக் காப்பகம் வாயிலாக ‘பி. ராம்லி பிறந்த இடம்’ மற்றும் ‘பி. ராம்லி நினைவு நூலகம்’ ஆகிய இரண்டு சிறப்பு நிறுவனங்களை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதையும் Aaron சுட்டிக் காட்டினார்.

1929-ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்த டான் ஶ்ரீ பி.ரம்லி நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

திரைப்படம் மற்றும் இசைத் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் அனைத்துலக அரங்கில் மலேசியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறும் அவ்விழாவின் ஒரு பகுதியாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அவற்றுள் பி. ரம்லியின் பிறந்த வீட்டின் வரலாறு மற்றும் நினைவுகள் குறித்த உரை, மறைந்த டான் ஸ்ரீ பி. ரம்லிக்காக சிறப்புப் பிரார்த்தனைகள், சொற்பொழிவுகள் மற்றும் “100 விளக்குகள்” கண்காட்சி ஆகியவையும் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!