Latestமலேசியா

பினாங்கு – பேராக் நீர் ஒப்பந்தம்: அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தண்ணீர் உத்தரவாதம்

ஜோர்ஜ்டவுன், ஜூலை-16-பினாங்கு மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது.

பேராக் மாநிலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குத் தடையின்றி தண்ணீர் பெறுவதற்கான இந்த ஒப்பந்தத்தை, பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோ (Chow Kon Yeow) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் வழி, ​2032-ஆம் ஆண்டு முதல், பேராக்கிலிருந்து தினசரி 300 முதல் 500 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பினாங்குக்குக் கொண்டுவரப்படும்.

​இந்தத் திட்டத்திற்காக, பினாங்கு நீர் விநியோகக் கழகமான PBAPP ஆண்டுதோறும் 210 மில்லியன் ரிங்கிட் கட்டணமாகச் செலுத்தும் என முதல்வர் சொன்னார்.

தவிர, ஒரு கன மீட்டர் தண்ணீருக்கு 1.70 ரிங்கிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.

1973-க்குப் பிறகு பினாங்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான நீர் ஒப்பந்தம் இதுவாகும்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழில்முறைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுங்கை மூடா ஆறுக்கு மாற்றாக அல்லாமல், இரண்டாவது நீர் ஆதாரமாக இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது.

​குறிப்பாக, தென் செபராங் பிறை மற்றும் மத்திய பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலத் தீர்வாகக் கடல் நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம் குறித்தும் பினாங்கு அரசு ஆய்வு செய்து வருவதாக Chow Kon Yeow கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!