
கோலாலாம்பூர், ஜூலை-21 – மலேசியாவில் வாழும் தமிழ் பேசும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் தமிழ் கலைக் கலாச்சார சங்கத்தின் (TACA) புதியத் தலைவராக கல்வியாளரும் தொழிலதிபருமான Dr ஆர். வி. ஷ்யாம் பிரசாத் பொறுப்பேற்றுள்ளார்.
அண்மையில் கோலாகலமாக நடைபெற்ற இச்சங்கத்தின் முப்பெரும் விழாவில், சங்கத்தின் புதிய இலட்சினையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ A. கோகிலன் பிள்ளை, புதிய சின்னத்தை வெளியிட்டு புதிய நிர்வாகத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழன் என்ற அடையாளத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் எனத் தனது தலைமை உரையில் Dr ஆர். வி. ஷ்யாம் பிரசாத் கேட்டுக்கொண்டார்.
மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் இயக்குநர் விஜயலட்சுமி சுந்தரராஜன், கோபியோ மலேசிய தலைவர் குணா உள்ளிட்ட பல சமூகப் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சிலம்பம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



