
ஜோகூர் பாரு, ஜூலை-22-ஜோகூர் மாநில அரசாங்க வரலாற்றிலேயே முதன் முறையாக துணை ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக, மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி தெரிவித்தார்.
அவர்களில், கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் துணை ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட 29 வயதான வி. ருகேந்திரனும் ஒருவர்.
ம.இ.காவைச் சேர்ந்த அவர், ஜூலை 11 தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் கஹாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றார்.
ஏற்கனவே பெர்லிங் சட்டமன்ற உறுப்பினரான பி. பன்னீர் செல்வம் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது துணை ஆட்சிக் குழு உறுப்பினராக ருகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளது, மாநில அரசில் இந்தியப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிடவும், மக்களுக்குச் சிறந்த சேவை வழங்கிடவும் இந்த புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஓன் ஹாஃபிஸ் சொன்னார்.
மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 48-ல் அமோக வெற்றிப் பெற்று, பாரிசான் நேஷனல் ஜோகூரில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.



