
கோலாலம்பூர், ஜூலை-25-மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் குறித்து, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, சமூகத்தில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனுசி, நாட்டில் மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரமும் பொருளாதார பலமும் சரிந்து வருவதாகவும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் அவை முழுமையாகப் பறிபோய்விடும் அபாயத்தில் இருப்பதாகவும் சொன்னார்.
அதோடு, இந்நாட்டு இந்தியர்களுக்கும் சீனர்களுக்குமாவது இந்தியா, சீனா என்ற பூர்வீக பூமி உள்ளது; ஆனால் மலாய்க்காரர்களுக்கு இருப்பது என்னவோ இந்த Tanah Melayu என்ற மலாய் பூமி மட்டுமே என சனுசி கூறினார்.
இந்நிலையில்,
பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, சனுசியின் கருத்தை நிராகரித்துள்ளது.
இந்நாட்டு இந்தியர்கள் ஒருபோதும் இந்தியாவைத் தாய்நாடாகப் பார்த்ததில்லை எனக் கூறி அதன் தலைவர் பி.புனிதன், மலேசிய மண்ணே அவர்களின் ஒரே தாய்நாடு என்றார்.
_”சுற்றுலாவுக்கும், ஆன்மீகப் பயணத்திற்கும் இந்தியா செல்வோவே தவிர, அதற்காக அங்கேயே நிரந்தரமாக தங்கி விட ஒருபோதும் நினைத்ததில்லை”_ என்றார் அவர்.
மலேசியா வெறும் வீடு அல்ல, மாறாக முழு உள்ளுணர்வோடு நேசிக்கும் தாய் நாடு என புனிதன் அறிக்கையொன்றில் கூறினார்.
இவ்வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் இந்தியத் தலைவர்களும் சனுசியின் பேச்சை கடுமையாகச் சாடியுள்ளனர்.
மலேசிய இந்திய -சீன வம்சாவளியினரின் மனதை நோகடித்துள்ள சனுசியை அதிகாரிகள் விசாரிக்க வேண்மென DAP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் வலியுறுத்தியுள்ளார்.
இங்கு பிறந்து வளர்ந்த மலாய்க்காரர் அல்லாதோர் அனைவரும் சட்டப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் மலேசியக் குடிமக்களே; மாறாக வெளிநாட்டு பிரஜைகள் அல்லர் என கம்பார் எம்.பியுமான Chong Zhemin கூறினார்.
எனவே சனுசி தனது அக்கருத்தை மீட்டுக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், சனுசியின் பேச்சு இனவாதமானது, நிந்தனைக்குரியது என, ஹராப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர் Woo Kah Leong சாடியுள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதோரை வேறெந்த நாட்டுடனும் இணைத்து அவர்களின் விசுவாதத்தை கேள்வி எழுப்புவது கூடாது என்றார் அவர்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், சனுசியின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



