
அம்பாங், ஜூலை-25-அம்பாங்கில் சக மாணவன் ஒருவனைத் தாக்கிய விவகாரத்தில், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மூவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி, பகடிவதை குறித்துப் பொது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட போலீஸார், அம்பாங், Sri Nilam அடுக்குமாடி குடியிருப்பில் F புளோக்கில் இச்சம்பவம் நிகழ்ந்ததைக் கண்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவன், சந்தேக நபர்களில் ஒருவனது காதலிக்குத் தொந்தரவு தந்தததே தாக்குதலுக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சந்தேக நபர்களில் ஒருவனால் கூட்டி வரப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவனை, கன்னத்தில் அறைந்தும் உடலில் எட்டி உதைத்தும் உள்ளனர்.
இக்காட்சிகளை உடனிருந்த இன்னொருவன் வீடியோவில் பதிவுச் செய்ய, பின்னர் அது வாட்சப் வாயிலாக வைரலானது.
இந்நிலையில் காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகப் பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.



