Latestமலேசியா

இந்தியச் சமுதாயத்திற்கான மடானி அரசின் பங்களிப்பு: மித்ராவைத் தாண்டி ஒட்டுமொத்தப் பார்வை அவசியம் – சண்முகம்

புத்ராஜெயா, ஜூலை-26-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்தியச் சமுதாயத்திற்கு வழங்கி வரும் ஆதரவை மித்ரா அமைப்போடு மட்டும் சுருக்கிவிடாமல், ஒட்டுமொத்த அரசாங்கத்தின் திட்டங்களின் வழியே பார்க்க வேண்டும் எனப் பிரதமரின் சிறப்பு அதிகாரியான சண்முகம் மூக்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.

2023 முதல் இதுவரை மித்ராவிற்கு 450 மில்லியன் ரிங்கிட், MIED நிறுவனத்திற்கு 101 மில்லியன், தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்பு மற்றும் TAFE கல்லூரி உட்படக் கல்வித்துறைக்கு 182 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 344 ஆலயங்களைப் புனரமைக்க 46.5 மில்லியன், மின் மயானங்கள் அமைக்க 20 மில்லியன், தமிழ்மொழி மேம்பாட்டுக்கு 5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதுடன், SPUMI, PENN, Vetri MADANI போன்ற திட்டங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு 555 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

STR, SARA போன்ற தேசிய அளவிலான திட்டங்கள் மூலமும் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

சமூகம் எதிர்பார்க்கும் மாற்றங்களும் மேம்பாடும் கண்மூடி திறப்பதற்குள் ஒரு நொடியில் நிகழ்ந்து விடாது; அவை முழுமை பெறச் சிறிது காலம் தேவைப்படுமென சண்முகம் வலியுறுத்தினார்.

குறைகளைச் சுட்டிக்காட்டுவது ஜனநாயகத்தின் உரிமை என்றாலும், அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளை நியாயமான முறையில் மதிப்பிட வேண்டும் என்றும் அறிக்கை வாயிலாக அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!