
கோலாலம்பூர், ஜூலை 27 – 2026 காமன்வெல்த் போட்டியின் மூன்றாவது நாளில் மலேசியா பளுதூக்கல் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளது.
ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் போட்டியிட்ட முகமட் அனிக் கஸ்டான் (Mohamad Aniq Kasdan), மொத்தம் 273 கிலோ எடையைத் தூக்கி மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், 152 கிலோ ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ மற்றும் 273 கிலோ மொத்த எடை என இரண்டு காமன்வெல்த் போட்டி சாதனைகளையும் அவர் பதிவு செய்தார்.
ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் முகமது அஸ்னில் பிடின், 299 கிலோ மொத்த எடையைத் தூக்கி இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அதோடு, 133 கிலோ ‘ஸ்நாட்ச்’, 166 கிலோ ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ (clean and jerk) மற்றும் 299 கிலோ மொத்த எடை என மூன்று புதிய போட்டி சாதனைகளையும் படைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் தங்கத்தை வென்றார்.
மகளிர் 48 கிலோ பிரிவில் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற ஐரின் ஜேன் ஹென்றி, 167 கிலோ மொத்த எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் மலேசியா, 2 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.



