Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் BN–PN அமோக வெற்றி; மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பு

நெகிரி செம்பிலான், ஆகஸ்ட் 1 – இன்று நடைப்பெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல்–பெரிக்காதான் நேஷனலும் இணைந்து 25 தொகுதிகளை கைப்பற்றி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

மறுபுறம், பக்காத்தான் ஹராப்பான் (PH) 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, சென்னா தொகுதியில் DAP பொதுச்செயலாளர் அந்தோணி லோக், பாரிசான் நேஷனல் வேட்பாளர் Siow Kong Choon-நிடம் தோல்வியடைந்தார்.

அதேபோல், முன்னாள் மந்திரி பெசாரான டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாருன், லிங்கி தொகுதியில் BN வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது தேர்தலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்திய வேட்பாளர்கள் போட்டியிட்ட  தொகுதிகளிலும் கலவையான முடிவுகள் பதிவாகின.

நீலாய் தொகுதியில் பக்காதான் ஹராப்பானின் அருள் குமார் தனது தொகுதியை 4வது முறையாக தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

அதேபோல சிரம்பான் ஜெயா தொகுதியில் பக்காதான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தன் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் போட்டியிட்ட பக்காதான் ஹராப்பானின் ராஜசேகரன் வெற்றி பெற்றார்.

பாரிசான் நேஷனல் சார்பில் ம.இ.கா வின் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஶ்ரீ தஞ்சோங் மற்றும் சிரம்பான் ஜெயா தொகுதியில் தோல்வி கண்டனர்.

இதனிடையே கடந்த நான்கு தவணைகளாக ரெப்பா தொகுதியைத் தொடர்ந்து தக்கவைத்திருந்த பக்காதான் வேட்பாளர் வீரப்பன், இம்முறை கடும் போட்டிக்குப் பிறகு பாரிசான் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

தேர்தலுக்கு முன்பே அதிக கவனம் பெற்ற இந்தத் தொகுதி, இத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய களங்களில் ஒன்றாகும்.

ஜெராம் படாங் தொகுதியில் பக்காதானின் மணிவண்ணனும் வெற்றியைப் பெறத் தவறினார்.

பெர்சாத்து சின்னத்தில் உரிமை கட்சி சார்பில் Mambau மற்றும் Seremban Jaya ஆகிய இடங்களில் போட்டியிட்ட இரு இந்திய வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையில் பெர்சாத்து தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறத் தவறியது, அந்தக் கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், பெரிக்காதான் கீழ் லுக்கூட்டில் போட்டியிட்ட MIPP கட்சியின் இந்திய வேட்பாளரான சத்திஸ் தோல்வி கண்டார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அம்னோ பொதுச்செயலாளர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கி, மலாய்க்காரர்களை பெரும்பான்மையாக கொண்ட அனைத்து தொகுதிகளையும் பாரிசான் நேஷனல்–பெரிக்காதான் நேஷனல் அரசியல் ஒத்துழைப்பு கூட்டணி கைப்பற்றியதுடன், மலாய்க்காரர்கள் அல்லாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

அதேவேளை, அரசியல் ஆய்வாளர்களும் பாரிசான் நேஷனல் –பெரிக்காதான் நேஷனல் தேர்தல் ஒத்துழைப்பு வியூகம் எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதாகவும், வாக்கு சிதறலைத் தவிர்த்து இந்த வெற்றியை உறுதிப்படுத்திய முக்கிய காரணிகளில் அதுவும் ஒன்றாக இருந்ததாகவும் மதிப்பிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!