
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.04-சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, Desa Mentari பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், ஐந்து வாகனங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் அப்பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் Shamsudin Mamat தெரிவித்தார். அம்மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என அவர் அறிக்கையொன்றில் கூறினார்.
வாகன நிறுத்துமிடத்தில் ஐந்து வாகனங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாக நம்பப்படும் ஒரு கும்பலைக் காவல் துறை தேடி வருவதாக நேற்று தகவல் வெளியானது.
மாலை 5 மணியளவில் அச்சம்பவம் குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துணைத் தலைவர் M Hussin Sollehuddin Zolkifly தெரிவித்திருந்தார். சேதம் விளைவித்தல் மற்றும் சேதத்தை ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலுள்ள கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன வரிசைகளுக்கு இடையே மோட்டார் சைக்கிள்களில் பல ஆண்கள் செல்வது பதிவாகியுள்ளது. அவர்களில் சிலர் கார்களுக்கு அருகே நிற்கும் காட்சிகளும் அதில் உள்ளன.



