
கோம்பாக், ஆகஸ்ட்.04- சிலாங்கூர், கோம்பாக்கில் Kanching நீர்வீழ்ச்சிப் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 2.37 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளும் பணியாளர்களும் ஒரு தீயணைப்பு வாகனத்தில் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குச் சென்றடைந்ததும், சம்பந்தப்பட்ட இந்தியப் பிரஜை நீர்வீழ்ச்சிப் பகுதியில் வழி தவறியிருக்கலாம் என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நடவடிக்கை கமாண்டரிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதனை அடுத்து நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் தேடல் பணி முடுக்கி விடப்பட்டது. இறுதியில் இரவு 10.30 மணிக்கு அந்த இந்திய நாட்டவர் பத்திரமாக மீட்கப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டு வந்ததாக Ashrul விளக்கினார்.



