
பிந்துலு, ஆகஸ்ட்-4 – மலேசியாவில் முதல்முறையாக டிஜிட்டல் பதிவு மற்றும் நிர்வாக முறையைப் பயன்படுத்தி, சரவாக் பிந்துலு மருத்துவமனையின் ‘Anjung kasih’ தங்குமிடம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் உறவினர்கள் இலவசமாகத் தங்குவதற்காக இந்த ‘Anjung Kasih’ மையம் செயல்பட்டு வருகிறது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் நிர்வாக முறை மூலம், தங்குமிடப் பதிவு மற்றும் நிர்வாகப் பணிகள் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.
பிந்துலு போர்ட் அறக்கட்டளையின் 1.9 மில்லியன் ரிங்கிட் நிதிப் பங்களிப்பில் உருவாகியுள்ள இந்த மையத்தைச் சரவாக் பிரீமியர் தான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓப்பெங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
ஒரே நேரத்தில் 75 பேர் வரை தங்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறை உட்பட 25 அறைகளுடன் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பான டிஜிட்டல் முயற்சிக்கு மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரியும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் நலனை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.



