
புது டெல்லி, ஆகஸ்ட்-6_”எனக்கு என்ன நேர்ந்தாலும் சரி, என் நாட்டு மக்களிடம் நான் கண்டிப்பாகத் திரும்புவேன்”_ என வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜீட் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2024 ஜூலையில் வெடித்த மாபெரும் மாணவர் புரட்சியால் பதவி வீழ்த்தப்பட்டு,இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, புது டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீடியோ வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மரண தண்டனை அல்லது சிறை தண்டனை போன்ற எந்த ஆபத்துகள் காத்திருந்தாலும், தாய்நாட்டுக்குத் திரும்புவதில் தாம் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
தம்முடைய இந்த முடிவு சொந்த அரசியல் ஆசைக்காக அல்ல என்றும், வங்காளதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மட்டுமே என்றும் அவர் கூறிக் கொண்டார்.
மேலும், தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என நிராகரித்த ஹசீனா, மக்களின் ஆதரவோடு தனது அவாமி லீக் கட்சி மீண்டும் வலுவாக உருவெடுக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஹிசீனாவுக்குத் கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எப்போது நாடு திரும்பினாலும் கைதுச் செய்யப்படுவது மட்டும் உறுதி எனத் தெரிகிறது.



