Latestமலேசியா

16-ஆவது பொதுத் தேர்தலில் 122 தொகுதிகளுடன் புத்ராஜெயாவை BN-PN கைப்பற்றலாம்; Ilham Centre கணிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-8,வரவிருக்கும் 16-ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகள் இணைந்து போட்டியிட்டால், அவை 122 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் புத்ராஜெயாவில் ஆட்சியைப் பிடிக்கலாம்.

நெகிரி செம்பிலான் தேர்தலில் வீசிய ‘நீல அலை’ நாடு முழுவதும் பரவினால், அதற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாக இருப்பதாக, அரசியல் ஆய்வு மையமான Ilham Centre கணித்துள்ளது.

​தீபகற்ப மலேசியாவில் உள்ள 138 நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய் வாக்காளர்கள் 51 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளனர்.

அவற்றில் 86 தொகுதிகளில் அவர்கள் 65 விழுக்காட்டுக்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர்.

ஆகவே, BN-PN இடையிலான அரசியல் ஒத்துழைப்புத் தொடர்ந்தால், இதற்கு முன் மூன்றாக பிரிந்த மலாய் வாக்குகள் இனி BN-PN மற்றும் PH என இரண்டாகக் குறைந்து தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என, அம்மையத்தின் நிர்வாக இயக்குநர் Hisommudin Bakar தெரிவித்தார்.

​இருப்பினும், இந்தத் தொகுதிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகரங்கள் மற்றும் நகரத்தை ஒட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ளன.

இதனால், பக்காத்தான் ஹராப்பான், BN மற்றும் PN கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் எத்தரப்பிற்கும் சாதகமாக மாறக்கூடும் என்றார் அவர்.

​ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, அடுத்து வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலை நோக்கி இந்த BN-PN கூட்டணிகளின் அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.

தேர்தல் ரீதியிலான இந்தப் புரிதல், தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான மலாய் வாக்காளர்களின் ஆதரவு குறைந்து வருவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், அரசியல் ஒத்துழைப்புக் குறித்து BN-PN அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில் புரிய வைத்து, தேர்தலை இணைந்துச் சந்தித்தால், அவர்கள் புத்ராஜெயாவை எளிதில் கைப்பற்றி விட முடியும்.

16-ஆவது பொதுத் தேர்தல் PH vs BN-PN என்ற நேரடிப் போட்டிக்கு வித்திடுமேயானால், மீண்டுமொரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் வாய்ப்புக் குறைவே என்றும் Hisommudin கூறினார்.

எது எப்படி இருப்பினும் இந்த ‘நீல அலை’ கூட்டணிப் பலம் மேலும் வலுப்பெற்றால், அது மலேசியாவின் தேசிய அரசியல் சூழலை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்பது திண்ணம்.

​இது பக்காத்தான் ஹராப்பானின் ஆட்சி அதிகாரத்திற்குப் பெரும் சவாலாக அமைவதோடு மட்டுமல்லாமல், சபா மற்றும் சரவாக் வட்டாரக் கட்சிகளின் ‘கிங் மேக்கர்’ என்ற அரசியல் செல்வாக்கையும் குறைக்க வாய்ப்புள்ளது.

இந்த சூழலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு தனது மக்கள் ஆதரவை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!